Thamayanthi (Varani) – A very special case June 2018
ஜூன் 2018 – எங்கள் இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் பயனுற்ற திருமதி அமுதச்செல்வி மோகன்ராஜா அவர்களிடமிருந்து அவசரமாக தொலைபேசி அழைப்பு வந்தது. தான் மருத்துவமனைக்கு சென்றிருந்த வேளை, கொடிகாமம் – சாவகச்சேரியை சேர்ந்த 36 வயதான தமயந்தி என்கின்ற நோயாளியை சந்தித்ததாகவும், இருதய நோய் முற்றி மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக கூறி அவரை உடனடியாக தொடர்பு கொள்ள சொல்லி கூறினார். நான் தொலைபேசியில் அழைத்த போது தமயந்தி, தான் 2010 தொடக்கம் இந்த வருத்தத்திற்காய் மருத்துவமனைக்கு சென்று காட்டி வருவதாகவும், இப்போது முற்றி போய் இதய வால்வ் ஒன்றில் கசிவு ஏற்பட்டு மூச்சிழுக்க போராடுவதாகவும், தனியார் சத்திர சிகிச்சைக்காய் தன கணவர் தனது தாயாரின் காணியை அடகு வைத்து எடுத்த பணத்தில் பெரும் பகுதி பரிசோதனைகளுக்கே செலவழிந்து விட்டதாகவும் மேலும் சத்திர சிகிச்சைக்கு 16 லட்சம் தேவையென்றும் கண்ணீர் மல்க கூறினார். மேலும் அவர் கூறிய சில விடயங்கள் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது. ஆமாம்………யுத்தத்தில் தனது 4 சகோதரர்களையும் இழந்து தவிக்கும் இந்த சகோதரிக்கு 10 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் 2 வயதில் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அவரின் கணவர் முயற்சியுள்ள ஒரு மனிதர் என்றாலும் மாத வருவாயில் காலம் தள்ளும் அவர்களின் நிலைமை இவ்வளவு பெரிய பண சுமையை தாங்க மாட்டாது. அதுவும் அவர் “என்னுடைய ஒரு அண்ணனாவது இப்போது உயிரோடு இருந்திருந்தால் என்னை எப்படியும் இப்போது காப்பாற்றியிருப்பர்” என்று அழுது கொண்டே சொன்ன அந்த வார்த்தைகள் என்னை கலங்க வைத்தது. அவரோடு உடன் பிறக்கவிட்டாலும் அவருக்கு அண்ணன் நிலையிலிருந்து நான் அவருக்கு தேவையானதை செய்வேன் என்று வாக்களித்து விட்டு உடனடியாக இலங்கை மருத்துமனையின் இதய மருத்துவ நிபுணர் திரு காந்திஜியிடம் தொர்பு கொண்டு சத்திர சிகிச்சைக்கான ஏற்பாட்டினை உடன் செய்யுமாறு வேண்டினேன். சென்ற வெள்ளிக்கிழமை காலை, தமயந்தியின் இதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்று தற்சமயம் உடல் நிலை தேறி வருகிறார் என்பதனை பெரு மகிச்சியுடன் அறியத் தருகின்றேன். இந்த சத்திர சிகிச்சையினை பணம் ஏதும் பெறாமல் தங்களது நேரத்தை தந்துவிய Dr காந்திஜி மற்றும் அவரின் மருத்துவ குழுவிற்கும், சத்திர சிகிச்சை செலுவுகளை பாதியாக குறைத்துதவிய லங்கா மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த மருத்துவ செலவினை தானமாக தந்து உயிர் காத்த அத்தனை “மனித வடிவில் இருக்கும் தெய்வங்களுக்கு” நன்றி!